டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கிய தகவல்கள்

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸிப்ரான் தொழில்நுட்பத்துடன் வர இருக்கும் இந்த காரின் ரேஞ்ச், மின் மோட்டார், பேட்டரி என இந்த காரில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரில் பேட்டரியானது, தரை தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், பாடி ரோல் எனப்படும் கார் நிலைத்தன்மையை இழக்கும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது. விபத்து வாய்ப்பையும் தவிர்ப்பதுடன், கையாளுமையும் ஜோராக இருக்கும். இந்த காரில் 28.8 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியானது 129 எச்பி பவரையும், 254 என்எம் டார்க் திறனையும் வழங்கும். தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோல், டீசல் நெக்ஸான் காரைவிட இந்த மின்சார மாடல், அதிக செயல்திறன் மிக்கதாக இருக்கும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கி.மீ தூரம் வரை பயணிக்கும். இந்த காருக்கு வழங்கப்படும் வீட்டு சார்ஜர் மூலமாக மின்ஏற்றம் செய்வதற்கு 8 முதல் 9 மணிநேரம் பிடிக்கும். டிசி பாஸ்ட் சார்ஜர் மூலமாக ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்துவிட முடியும். பேட்டரி கார்களில் மிக முக்கிய பாதகமான அம்சமாக கூறப்படுவது, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு பேட்டரியை மாற்ற வேண்டிய பிரச்னை உள்ளது. அதுவும், இது கணிசமாக செலவு வைக்கும் விஷயமாக உள்ளது. இந்த நிலையில், நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கி.மீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படும்.

இந்த எலெக்ட்ரிக் கார், 3,995 மி.மீ நீளமும், 1,811 மி.மீ அகலமும், 1,607 மி.மீ உயரமும் பெற்றிருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலின் அதே 2,498 மி.மீ வீல் பேஸ் நீளத்தை பெற்றிருக்கும். பிரத்யேக சஸ்பென்ஷன் அமைப்பு காரணமாக, சாதாரண நெக்ஸான் கார் 215 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கும் நிலையில், இந்த கார் 209 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கும். பின்புறத்தில் டார்சன் பீம் கொண்ட செமி இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில், முழுமையான எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்வேளை விளக்கு, பவர் போல்டிங் விங் மிரர், ரெயின் சென்சிங் வைப்பர், பவர் சன்ரூப், புஷ் பட்டன் ஸ்டார்ட், கையில் அணிந்து கொள்ளக்கூடிய ஸ்மார்ட் சாவி, ஹார்மன் இன்போடெயின்மென்ட் சாதனம், ரியர் வியூ கேமரா, 8 ஸ்பீக்கர், வாய்ஸ் கமாண்ட் உள்ளிட்ட பல்வேறு வசதி இடம்பெற்றிருக்கும். இந்த கார், ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும். அதேநேரத்தில், இந்த மூன்று மாடல்களில் விலை குறைவான தேர்வாகவும் அமையும். அதாவது, இந்த கார், 15 லட்சம் முதல் 17 லட்சம் வரை எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *