டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் லஸ்ஸோ என்ற செயலியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் லஸ்ஸோ செயலியை இந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் லஸ்ஸோ சேவையை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஃபேஸ்புக் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, டிக்டாக் செயலி லஸ்ஸோவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் சிங்கப்பூரில் உள்ள ஃபேஸ்புக் குழு ஒன்று இந்திய வெளியீட்டிற்கு லஸ்ஸோ செயலியை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் டிக்டாக் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கியவற்றை அறிந்து கொள்ள ஃபேஸ்புக் நிறுவனம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் உதவியுடன் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிக்டாக்கிற்கு போட்டியை ஏற்படுத்தும் நோக்கில், லஸ்ஸோ சேவையில் இணைந்து கொள்ள கிரியேட்டர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட லஸ்ஸோ சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட லஸ்ஸோ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இதுவரை பல லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர்.

லஸ்ஸோ செயலியை இந்தியா தவிர இந்தோனிசியா போன்ற வளரும் சந்தைகளிலும் வெளியிட ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *