பனை ஏறி தொழில் செய்யும் பார்வை மாற்றுத் திறனாளி

ராமநாதபுரத்தை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி முருகாண்டி, பனை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார்.

மரம் இருக்கும் இடத்திற்கு செல்லும் வரை, தன் மனைவி உதவுவதாக கூறும் அவர், பனை மரம் ஏற தன் தாயிடம் கற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கிறார்.

ராமநாதபுரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உச்சிப்புளி அருகே உள்ளது கடலோர கிராமமான வெள்ளரி ஓடை. கிராமத்தைச் சுற்றி பனைமரக் காடுகள் சூழ்ந்திருக்க, ஒதுக்குப்புறமாக தனி வீட்டில் மனைவி கலாதேவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்து வருகிறார் முருகாண்டி.

அவரை சந்திக்கச் சென்றபோது, ரேடியோவில் பாட்டு கேட்டு கொண்டிருந்தார். நாம் சென்றது ரேடியோவை நிறுத்திவிட்டு ‘என் வீட்டு வரவங்களுக்கு நுங்கு, பதநீர் சாப்பிட கொடுக்குறது வழக்கம். ஆனால் இப்போ சீசன் இல்லை அதனால இந்த சாயவ (டீ) குடிங்க பேசுவோம்’ என ஆரம்பித்தார்.

‘பிறவியிலேயே பார்வை கிடையாது. அப்பாவும், சிறுவயதிலேயே எங்களை விட்டுப் பிரிந்து இலங்கையில் போய் நிரந்தரமாக தங்கிவிட்டார். அம்மாதான் பாய், கூடை முடைந்து கஷ்டப்பட்டு என்னை வளர்த்துச்சு’.

எங்க ஊரைச் சுத்தி பனங்காடுகளா இருந்ததால, சின்ன வயசுலயே எனக்கு பனை மரம் ஏற, நுங்கு சீவ, பாய் முடைய, ஓலை கிழிக்க,வேலி அடைக்க, அம்மா பழக்கினாங்க. 10 வயதில் இருந்து அம்மாவுடன் வேலைக்கும் போக ஆரம்பிச்சேன். எனக்கு இருந்த வைராக்கியம் தான் என்ன பனை மரம் ஏற தூண்டுச்சு. நமக்கு கண்னுதான தெரியல மரத்துல இருந்து கிழே விழுந்தா கை,கால்தான உடையும். என்ன ஆனாலும் பாத்துக்கலாம்னு பனை மரம் ஏற ஆரம்பிச்சேன்.

அதுக்கு பின்னாடி அம்மாவுக்கும் வயசு போயிடுச்சு என்னை கவனிக்க முடியால, எங்க மாமா வீட்ல பெண் இருந்துச்சு. அத்தை வீட்ல பொண்னு இருந்துச்சு. ஆனா யாரும் எனக்கு பெண் கொடுக்க முன் வரல. அப்பறம் என் மனைவி என்னோட தன்னம்பிக்கையை பாத்து கல்யாணம் பண்ணிகிட்டா. இப்ப, என்னோட ரெண்டு புள்ளைகளும் சில நல்ல மனுசங்க உதவியோட படிக்குதுங்க.

ரெண்டு புள்ளைகளையும் படிக்க வைக்குற? பேசாம, அவங்களையும் வேலைக்கு அனுப்பிடுன்னு ஊர்க்காரங்க சொன்னாங்க.பார்வையில்லன்னு நான்தான் படிக்காம போயிட் டேன். ஆனால், நம்ம புள்ளைகள படிக்க வெச்சு பெரிய ஆளாக்கிடணுங்கிற வைராக்கியத்துல படிக்க வெக்கிறேன்,இந்த வருஷத்தோட ரெண்டு புள்ளைகளுக்கும் படிப்பு முடியுது. அடுத்தது அவங்க கல்யாணம் தான்.

” 1977ல ஒரு நாள் ஓலை வெட்ட பக்கத்து ஊருக்கு போயிருந்தேன் அப்ப ஒரு வளஞ்ச மரத்துல தெரியாம ஏறிட்டேன். திடீர்னு நெஞ்சுல மரம் அடிச்சதுல மரத்துல இருந்து எப்படி கீழ விழுந்தேன்னு தெரியல. ஆண்டவன் புண்ணியத்துல உயிர் தப்பிச்சேன். அது தான் முதல் முறை மரத்துல இருந்து விழுந்தது. அப்புறம் ரெண்டு தடவ மரத்துல இருந்த விஷ குளவி கடிச்சதால, கொஞ்ச நாள் மரம் ஏறாம இருந்தேன். அப்புறம் மரம் ஏற ஆரம்பிச்சுட்டேன்.

நான் யார்கிட்டையும் வேண்டா வெறுப்பா நடந்துக்க மாட்டேன். அதுனால என்ன ரொம்ப பேரு விரும்பி பனை ஓலை வெட்ட வேலைக்கு வந்து கூட்டிட்டு போவாங்க. சில நேரம் ஒரே நாள்ல வீட்டுக்கு வந்துருவேன். சில நேரம் வீட்டுக்கு வர நாலு நாள் அஞ்சு நாள் கூட ஆகும். அப்பல்லாம் பனை மரம் நெறய இருந்துச்சு. நல்லா வருமானம் கிடைச்சது. இப்ப பனை மரம் இல்லை. வருமானம் இல்லை. அதனால அரசு நூறு நாள் வேலைக்கு போயிட்டு இருக்கேன். யாராவது பனை ஏற கூப்பிட்டா போவேன்,” என தழுதழுத்த குரலில் சொன்னார் முருகாண்டி.

பின்னர் அவர் மனைவி கலாதேவியிடம் பேசினோம் “எனக்கு கல்யாணமாகி 22 வருஷம் ஆச்சு. நான் எங்க ஊர்ல உள்ள மில்லுல வேலை பாத்துட்டு இருந்தேன். அப்ப இவரு அங்க ஓலை வெட்ட வந்தாரு. அப்பதான் நான் இவர முதல்ல பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சி. என்ன இவரு வச்சு காப்பாத்திடுவார்னு நம்பிக்கை இருந்துச்சு” என்றார் அவர்.

“இவ்வளவு நாள் ஓலை வெட்டிதான் எங்கள காப்பத்திட்டு வந்தாரு. எங்க புள்ளைகளையும் படிக்க வச்சாரு. அதுக்கு அப்புறம் கொஞ்ச பேர் கிட்ட உதவி கேட்டுதான் புள்ளைகள படிக்க வச்சுட்டு வர்ரோம்.

வீட்டுல சும்மாவே இருக்க மாட்டாரு ரேடியோல பாட்டு கேக்குறது, டிவில செய்தி கேக்குறதுன்னு எதாவது செஞ்சுட்டே இருப்பாரு. நாம எத சொன்னாலும் காதுல வாங்கிக்க மாட்டாரு. வீட்ல இருக்குற கரண்டு வேலை எல்லாம் அவருதான் பாப்பாரு.

பக்கத்து ஊர்களுக்கு அவரே பஸ்ல போயிட்டு வந்துடுவாரு. ஆனா தொலைவா போகணும்னா நாமதான் கூட்டிட்டுபோகனும். ஓலை வெட்ட சில நேரம் அவங்களே கூட்டிட்டு போயிட்டு திரும்பி வந்து வீட்ல விட்டுருவாங்க. இல்லைன்னா நானே கையில புடிச்சி கூட்டிட்டுபோவேன்” என்றும் தெரிவித்தார் அவர் மனைவி கலாதேவி.

“நான் வீட்டில் பாய் முடைவேன். ஆனா நிறைய பனை மரங்களை வெட்டுனதால அவருக்கு பனை மரம் ஏற வாய்ப்பு இல்லை. எனக்கு பாய் முடையவும் வாய்ப்பில்லை. ரொம்ப கஷ்டப்படுகிறோம். மாற்று தொழில் ஏதாவது கத்துக்கிட்டாதான் வாழ்கையை ஓட்ட முடியும்” என்றும் கவலையோடு சொன்னார் கலாதேவி.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *