Health Tips: நீண்ட ஆயுளையும், உடல்நலத்தையும் பெற நீங்கள் செய்ய வேண்டியவை

வாழ்க்கைமுறை ஆரோக்கியமானதாக இருந்தால் புற்றுநோய், இதயக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் இல்லாமல், ஆயுள் பெண்களுக்கு 10 ஆண்டுகளும், ஆண்களுக்கு ஏழு ஆண்டுகளும் அதிகரிக்கும் என்று உடல்நலம் குறித்த ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும், மது குடிப்பதை மிதமான அளவுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும், உடல் எடை ஆரோக்கியமான நிலையில் இருக்க வேண்டும், உணவு வகைகள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும், புகைபிடிக்கக் கூடாது என்று பல ஆலோசனைகள் இதில் கூறப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 111,000 பேரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணித்து வந்தனர்.

இந்த ஆய்வில் ”பொது மக்களுக்கு ஆக்கபூர்வமான தகவல் கிடைத்துள்ளது” என்று பாஸ்டனில் உள்ள பொது சுகாதாரத்துக்கான ஹார்வர்டு கல்லூரியைச் சேர்ந்த, இந்த ஆய்வை தலைமை ஏற்று நடத்திய டாக்டர் பிராங் ஹியு கூறியுள்ளார்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது என்ன?

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம், அவர்களின் 50வது வயதில் பின்வரும் ஐந்து விஷயங்களில் நான்கு விஷயங்களை பின்பற்றுகிறீர்களா என்று கேட்கப்பட்டது.

ஒருபோதும் புகை பிடித்ததில்லை

•ஆரோக்கியமான, சமச்சீரான உணவு வகைகள்

•தினமும் 30 நிமிடங்கள் மிதமான அல்லது தீவிரமான உடல் இயக்க செயல்பாடுகள்

•பி.எம்.ஐ. அளவு (உயரத்துக்கு ஏற்ற எடைக்கான அளவீடு) 18.5 க்கும் 24.9 க்கும் இடையில் உள்ளது

•பெண்கள் சிறிய கிளாஸில் ஒயின், ஆண்கள் சுமார் அரை லிட்டர் பீர் தவிர வேறு குடிப்பழக்கம் இல்லாதிருத்தல்.

ஆரோக்கியமான உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் முக்கியமானவை.

34 ஆண்டுகள் வரை வாழும் பெண்களில் புற்றுநோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம், நீரிழிவு போன்ற நோய்கள் இல்லாத பெண்களை கணக்கெடுத்தால், மற்றவர்களைக் காட்டிலும், மேற்படி வாழ்ந்தால் மற்றவர்களைவிட 10 ஆண்டுகள் வரை கூடுதலாக வாழ்கிறார்கள்.

மேலும் 31 ஆண்டுகள் வரை வாழும் ஆண்களில், இந்தப் பிரிவினர் கூடுதலாக ஏழு ஆண்டுகள் வாழ்கிறார்கள்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஏன் வித்தியாசம் உள்ளது?

சராசரியாக ஆண்களைவிட பெண்கள் நீண்டகாலம் வாழ்கிறார்கள் என்ற உண்மையுடன் தொடர்புடையதாக அது இருக்கலாம்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் மிக ஆரோக்கியமாக உள்ள ஆண்களும், பெண்களும் ஒருபோதும் புகைபிடிக்காதவர்களாக உள்ளனர்.

தினமும் 15க்கும் மேற்பட்ட சிகரெட் பிடிப்பவர்கள், உடல்பருமனாக உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் (பி.எம்.ஐ. அளவு 30க்கும் மேல் உள்ளவர்கள்) நோயற்ற வாழ்வு வாழ்வதற்கான வாய்ப்பு குறைவுதான் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆனால் இரு பாலாருக்கும் பொதுவான சில விஷயங்கள் உள்ளன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் புற்றுநோய், இருதய கோளாறுகள், நீரிழிவு போன்றவற்றுக்கான ஆபத்து குறைவதுடன் மட்டுமின்றி, மற்ற நோய்கள் இருப்பதாகக் கண்டறியும்போது இந்த ஆண்கள் மற்றும் பெண்களின் ஆயுள் மேம்படுவதாக உள்ளது.

ஏன் இந்த நோய்கள் மீது மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது?

புற்றுநோய், இதய நோய்கள், நீரிழிவு நோய் ஆகியவைதான் முதிய வயதில் பெரும்பாலும் வரக் கூடிய நோய்களாக உள்ளன. அவைதான் மக்களின் வாழ்க்கை முறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையாக உள்ளன.

உதாரணமாக அதிக உடல் எடை அல்லது உடல்பருமனாக இருப்பது, மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் உணவுக் குழாய் புற்றுநோய் உள்ளிட்ட 13 வெவ்வேறு வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

சில புற்றுநோய்கள் உடல்பருமன் போன்ற வாழ்க்கை முறை காரணிகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவையாக உள்ளன.

புற்றுநோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் 10ல் நான்கு பேர் அதைத் தவிர்க்க முடியும் என்று பிரிட்டனில் புற்றுநோய் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. பதப்படுத்திய மாமிசத்தைக் குறைத்தல், நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சாப்பிடுதல், சூரிய வெப்பத்தில் இருந்து இருந்து தோலை பாதுகாத்துக் கொள்தல் போன்றவற்றை செய்யலாம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

வேறு காரணிகளுக்கு இதில் பங்கு உள்ளதா?

இது பரந்த அளவிலான, கண்காணிப்பு அடிப்படையிலான ஆய்வு. எனவே, நோயற்ற வாழ்வை நீட்டிப்பதில் இந்த வாழ்க்கை முறைகள்தான் நேரடி காரணிகளாக உள்ளன என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

மற்ற காரணிகளைப் பற்றி அறியவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குடும்பத்தின் மருத்துவ வரலாறு, மரபுவழி பின்னணி, வயது போன்றவையும் இந்த முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம என்று கருதப்படுகிறது.

ஆய்வில் பங்கேற்றவர்கள் தெவித்தபடி அவர்களின் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி பழக்கம், அவர்களின் உயரம் மற்றும் எடை ஆகியவற்றை குழுவினர் எடுத்துக் கொண்டனர். அனைத்து சமயங்களிலும் அவை சரியானவையாக இருக்கும் என சொல்ல முடியாது.

73,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 38,000 -க்கும் மேற்பட்ட ஆண்கள் ஆகியோரைக் கொண்ட இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சுகாதார துறையில் பணியாற்றும் வெள்ளையர் இனத்தவர்கள்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *