கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

நாக்பூர்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசமும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்றது. இந்திய அணியில் குருணால் பாண்டியாவுக்குப் பதிலாக மணிஷ் பாண்டேவும், வங்காளதேச அணியில் மொசாடெக் ஹொசைனுக்குப் பதிலாக முகமது மிதுனும் சேர்க்கப்பட்டிருந்தனர்.  

டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் மெகமதுல்லா பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் சார்பில், ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதில் ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து லோகேஷ் ராகுல் களம் இறங்கினார். தவான் 19 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லோகேஷ் ராகுல் 35 பந்தில் 7 பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் ஆட்டமிழந்ததும் ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.  தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 33 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 62 ரன்கள் விளாசினார். ரிஷப் பண்ட் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இறுதியில் மணிஷ் பாண்டே அதிரடி காட்ட இந்திய அணி  20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை  இழந்து 174 ரன்கள் சேர்த்தது. மணிஷ் பாண்டே 22 ரன்களும், சிவம் துபே 9 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வங்காளதேச அணியின் சார்பில் அதிகபட்சமாக சவுமியா சர்கார் மற்றும் சபிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அல் அமின் ஹுசைன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணியின் சார்பில் லிட்டன் தாஸ், முகமது நைம் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் லிட்டன் தாஸ் 9 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய சவுமியா சர்கார் (0) ரன் ஏதும் எடுக்காமலும், முகமது மிதுன் 27 ரன்களும், முஷிபூர் ரஹிம் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனிடையே அதிரடி காட்டி வந்த முகமது நைம் தனது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 81(48) ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஆபிப் ஹுசைன் (0) ரன் எதுவும் எடுக்காமலும், மெகமதுல்லா 8 ரன்களும், சபியுல் இஸ்லாம் 4 ரன்னும், முஸ்டாபிசூர் ரஹ்மான் 1 ரன்னும், அமினுல் இஸ்லாம் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.  

இறுதியில் அல் அமின் ஹுசைன் (0) ரன் ஏதும் எடுக்காமல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் வங்காளதேச அணி 19.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக  தீபக் சாஹர் 6 விக்கெட்டுகளும், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளும், சாஹல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில்  தொடரையும் கைப்பற்றியது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *