போக்குவரத்தை சீர்செய்யும் ‘ரோடியோ’ ரோபோ – சென்னை பள்ளி மாணவர்கள் சாதனை

பல்பொருள் அங்காடிகள் முதல் பல்மருத்துவம் வரை எண்ணிடலங்கா துறைகளில் ரோபோக்கள் என்னும் இயந்திர மனிதனின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

ரோபோ உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த எந்த விடயமென்றாலும், நமக்கு அமெரிக்கா மட்டுமே நினைவிற்கு வந்த காலம் மாறி தற்போது சென்னை போன்ற நகரங்களிலும்கூட ரோபோக்களை வடிவமைக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களிலுள்ள வேறுபட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இணைந்து ‘ரோடியோ’ என்னும் போக்குவரத்து விழிப்புணர்வையும், பணிகளையும் செய்யும் ரோபோவை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.

துறைசார்ந்த வல்லுநர்களின் மேற்பார்வையில் முழுக்க முழுக்க ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரையிலான மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோட்டை ஏற்கனவே சென்னை நகர போக்குவரத்து காவல்துறையினர் ஏற்றுக்கொண்டு பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த ரோபோ குறித்து மேலும் பல விடயங்களை தெரிந்துகொள்வதற்காக அதை உருவாக்கிய சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்பி ரோபோடிக்ஸ் என்னும் ரோபோடிக்ஸ் பயிற்சி நிறுவனத்தின் அணியினரிடம் பேசினோம்.

ரோபோடிக்ஸ் பயில சரியான வயது எது?

சென்னையை தலைமையிடமாக கொண்டு பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நாட்டின் பெருநகரங்களிலும், முக்கியமான மாவட்ட தலைநகரங்கள் என இந்தியா முழுவதும் 65 இடங்களிலும், ஆஸ்திரேலியாவிலும் செயல்படும் தங்களது நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக கூறுகிறார் ‘ரோடியோ’ என்னும் போக்குவரத்து சரிசெய்யும் ரோபோவை உருவாக்கிய பள்ளி மாணவர்களின் அணியின் வழிகாட்டியான சந்திரகுமார்.

“ஏழு வயது சிறுவர்கள் முதல் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரை என எங்களிடம் முப்பது ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பயின்று வருகிறார்கள். ரோபோடிக்ஸ் மட்டுமின்றி, IoT என்னும் பொருட்களின் இணையம், VR என்னும் மெய்நிகர் தொழில்நுட்பம் போன்றவை குறித்து அடிப்படை முதல் சமீபத்திய மேம்பாடுகள் வரை சொல்லி தருகிறோம்.

ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்கள் தங்களாவே கற்றுக்கொள்ளும் வகையில் அனிமேஷன் காணொளிகளை அடிப்படையாக கொண்ட அமைப்புமுறையுடன் செயல்முறை விளக்கத்துடன் கூடியதாக எங்களது பயிற்சி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறுகிறார்.

குறைந்தபட்சம் எத்தனை வயதானவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம் என்றும், இதன் மூலம் மாணவர்களது எதிர்காலத்தில் ஏற்படும் தாக்கம் குறித்தும் அவரிடம் கேட்டபோது, “11 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரோபோடிக்சை கற்றுக்கொள்வதற்கு நாங்கள் பரிந்துரைத்தாலும், எங்களது மையத்தில் 7 வயது குழந்தைகள் கூட பயின்று வருகின்றனர். ரோபோடிக்சை பொறுத்தவரை ஒருவரால் அனைத்தையும் செய்யவியலாது”

” ஒருவர் மென்பொருள் உருவாக்கம், வடிவமைப்பு, தயாரிப்பு என ஏதாவது ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கக்கூடும். எனவே, எங்களிடம் சேர்ந்தவுடன் மாணவர்களின் திறனை குறிப்பிட்ட காலம் ஆய்வு செய்து அவர்களுக்கு எத்துறையில் திறமை தென்படுகிறதோ அதை கற்பிப்பதுடன், அதை மாணவர்களை எதிர்காலத்தில் கல்லூரியில் சேர்க்கும்போது கவனத்தில் கொள்ளுமாறு பெற்றோரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று சந்திரகுமார் கூறுகிறார்.

ரோடியோ என்னதான் செய்யும்?

இந்நிறுவனத்தின் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, புனே ஆகிய நகரங்களிலுள்ள மையங்களை சேர்ந்த மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ரோடியோ எனும் இந்த போக்குவரத்து வழிகாட்டி ரோபோ, கடந்த ஜனவரி 14ஆம் தேதி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைக்கு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் “குழந்தைகளுக்கான சாலை விழிப்புணர்வு மையத்தில்” கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, விரைவில் சாலையில் பயன்பாட்டுக்கும் கொண்டுவரப்படுமென்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளதாக எஸ்பி ரோபோடிக்ஸ் தெரிவிக்கிறது.

இந்நிலையில், ரோடியோ என்னும் இந்த ரோபோவை உருவாக்குவதற்கு எப்படி திட்டமிடப்பட்டது, இந்த ரோபோ என்னவெல்லாம் செய்யும் என்று சந்திரகுமாரிடம் கேட்டபோது, “கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில்தான் முதல் முறையாக இதுபோன்ற ரோபோவை உருவாக்குவதற்கு முடிவெடுத்தோம். பிறகு சென்னை, ஐதராபாத், பெங்களூரு, புனே நகரங்களிலுள்ள எங்களது மாணவர்களில் 25 பேரை தேர்ந்தெடுத்து, பல குழுக்களாக பிரித்து திட்டமிட்டோம். ரோபோ தயாரிப்பு பணிகள் கடைசி கட்டத்தை அடைந்தபோது, அனைத்து மாணவர்களும் தொடர்ந்து சில வாரங்களுக்கு, வாரயிறுதியில் சென்னைக்கு வந்து பங்களிப்பு செய்தனர்” என்று கூறுகிறார்.

“இதில் பெரும்பாலும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களே பணிபுரிந்தனர். போக்குவரத்து சிக்கனல்களில் நிற்கும் வாகனங்களில் இருக்கும் மக்களுக்கு, ‘மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது’, ‘போக்குவரத்து விதிகளை மதித்து செயல்பட வேண்டும்’ என்பது போன்ற விழிப்புணர்வு காணொளிகளை ஒளிபரப்புவது, வாகனங்களை நிறுத்தி பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு உதவுவது போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் ரோடியோவை வடிவமைத்துள்ளோம்” என்றார் சந்திரகுமார்.

சந்திரகுமார்
Image captionசந்திரகுமார்

நான்கு நகரங்களை சேர்ந்த 25 பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து மூன்று மாதங்களில் உருவாக்கப்பட்ட இந்த மூன்றடி உயரமுள்ள ரோடியோவை தயாரிக்க சுமார் நான்கு லட்சம் செலவானதாக அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வர்த்தகரீதியாக இதை மேம்படுத்தும்போது ரோடியோவின் விலை பெருமளவு குறையுமென்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சென்னைக்கு அடுத்து புனே நகரில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி ரோடியோ ரோபோ அந்நகர காவல்துறை அதிகாரிகளின் பாராட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“எதிர்காலத்தை கட்டமைக்க உதவுகிறது”

ரோடியோ ரோபோவை வடிவமைத்ததன் மூலம் எதிர்காலத்தில் இத்துறையில் உலகளவில் பல்வேறு சாதனை படைக்க முடியுமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் சென்னையிலுள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் அத்வைத் நாயர்.

“நான் ரோடியோவை உருவாக்கிய வடிவமைப்பு அணியில் இருந்தேன். இதன் மூலம் எனது முதலாவது ரோபோவை உருவாக்கும் அனுபவத்தை பெற்றதோடு, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு எனக்கும் கிடைத்துள்ளது” என்று அவர் மேலும் கூறுகிறார்.

“ரோடியோவின் மென்பொருளை உருவாக்கும் அணியை சேர்ந்த எனக்கு, இந்த வெற்றியானது ரோபோவை உருவாக்குவதிலுள்ள பல்வேறு படிநிலைகளை அறிந்துகொள்வதற்கு வாய்ப்பாக அமைந்ததுடன், ரோபோடிக்ஸ் துறையில் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய குறிப்பிடத்தக்க இயந்திரங்களை உருவாக்க முடியுமென்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நான் கல்லூரியில் கண்டிப்பாக ரோபோடிக்சை படிக்க வேண்டுமென்ற முடிவையும் இதன் மூலம் எடுத்துள்ளேன்” என்று கூறுகிறார் சென்னையிலுள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ராஜமாணிக்கம்.

ரோடியோ ரோபோவை தவிர்த்து கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகளை எடுக்கும் தானியங்கி வாகனம், பயிரிடுவதில் விவசாயிகளுக்கு உதவும் ரோபோ, உணவை பரிமாறும் ரோபோ போன்ற பல்வேறு வகையான தயாரிப்புகளை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும், அவற்றை முழுவீச்சில் செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு அரசின் உதவி தேவைப்படுவதாகவும் அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளி மாணவர்களிடையே சிறிய வயதிலேயே ரோபோடிக்ஸ் போன்ற எதிர்கால தொழில்நுட்பம் குறித்த அறிமுகத்தை அளிப்பது மட்டுமின்றி, அதன் மூலம் கிடைத்த திறமையை வெளிக்காட்டுவதற்குரிய களத்தை அமைத்துக்கொடுப்பது இதுபோன்ற வித்தியாசமான கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.

எனினும், நகர்ப்புற தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களே அணுகக்கூடிய வகையில் இருக்கும் இதுபோன்ற வாய்ப்புகளை மாநிலத்தின் கடைக்கோடியில் இருக்கும் அரசுப்பள்ளியில் தமிழ்வழி கல்வி படிக்கும் மாணவருக்கும் கொண்டுசெல்வதே உண்மையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்.Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *