பொதுப் போக்குவரத்து சேவைகளில் இன்றும் கிருமி ஒழிப்பு செயற்பாடுகள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் முன்னெடுக்கப்படும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் இன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ்களில் ஒரு வார காலத்திற்கு 24 மணித்தியாலங்களுக்கும் கிருமி ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனைத் தவிர முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை அணியுறுமாறு பஸ் ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான 5700 இற்கும் மேற்பட்ட பஸ்களில் 24 மணித்தியாலங்களும் கிருமி ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரண்டா கூறியுள்ளார்.

அத்துடன், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் முகக்கவசங்கள் வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில் மேடைகளிலும் கிருமி ஒழிப்பு செயற்பாடுகள் இன்று (17) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனடிப்படையில் 400 ரயில்மேடைகளில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மருதானை, மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Share via
Copy link
Powered by Social Snap