வௌிநாட்டவர்களுக்கான விசா காலம் நீடிப்பு

நாட்டிற்கு வருகைதந்துள்ள வௌிநாட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அனைத்து விசாக்களினதும் காலாவதியாகும் திகதி கடந்த 14 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், விசாவை நீடிப்பதற்கான கட்டணத்தை செலுத்தி விசா காலத்தை கடவுச்சீட்டில் பதிவுசெய்வதற்கான தினங்களை குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் ஏதேனும் ஓர் நாளில் பத்தரமுல்லை இசுஹுருபாயவில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசா பிரிவிற்கு வருகைதருவது அவசியம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த காலத்திற்கு முன்னர், வௌிநாட்டு பிரஜையொருவர் நாட்டிலிருந்து செல்ல வேண்டுமாயின், விசா நீடிப்பிற்கான கட்டணத்தை விமான நிலையத்தில் செலுத்த வேண்டும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கான அபராதம் விதிக்கப்பட மாட்டாது எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழிருந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், உடன் அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வௌியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap