பூரண ஒத்துழைப்பு தாருங்கள் அரசாங்கம் கோரிக்கை!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நோய்த் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 19 பேர் இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

19 பேரில் ஒருவர் இங்கிலாந்தில் இருந்து வந்தவர். ஏனைய 18 பேரும் இத்தாலியிலிருந்து வந்து கந்தக்காடு மத்திய முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளர்களாவர்.

இவர்களின் 90 வீதமானோர் இலங்கைக்கு வரும்போதே நோய்த் தொற்றுடன் வந்தவர்கள் ஆவர். ஏனையோர் 24 மணிநேரத்தில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் ஆவர்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இதுவரை அடையாளம் காணப்பட்ட அனைவரையும் சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

அதற்கிணங்க, அவர்களும் செயற்படுவார்கள் என்றே நாம் நம்புகிறோம். எனினும், இந்த விடுமுறைத் தினங்களில் சிலர் ஒன்றுக் கூடி விளையாட்டுக்களில் ஈடுபடுவதாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது.

இவர்களிடம் நாம் தயவுசெய்து ஒன்றைக் கேட்டுக் கொள்கிறோம். முடிந்தளவு ஒன்றுக் கூடலை நிறுத்திக் கொண்டு எமக்கான ஒத்துழைப்பினை வழங்குங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்

Share via
Copy link
Powered by Social Snap