வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் இறுதி நாள் இன்று

 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் இறுதி நாள் இன்றாகும்.

இன்று (19) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இந்த பணிகள் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆட்சேபனை தெரிவிப்பதற்காக நண்பகல் 12 முதல் பகல் 1.30 மணி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வேட்புமனுவை கையளிக்கும்போது, ஆதரவாளர்களையோ, குடும்ப உறுப்பினர்களையோ அழைத்துவருவதை தவிர்க்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேட்புமனுவை கையளிக்கும் நபருடன் மேலதிகமாக ஒருவர் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என பொலிஸார் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்காக 357 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

பொதுத் தேர்தலை முன்னிட்டு 126 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

நேற்று மாலை வரை 124 சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்ததாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வேட்புமனுக்களை கையளித்ததன் பின்னர் மக்கள் ஒன்றுகூடுவதை நிறுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பேரணிகளை முன்னெடுப்பதை தவிர்க்குமாறு பொலிஸார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

மாவட்ட செயலகங்களின் பாதுகாப்பிற்காக பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap