இலங்கையின் அனைத்து இறைச்சிக் கடைகளையும் உடனடியாக மூடுங்கள்! சிவசேனை கோரிக்கை

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் உடன் மூடுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கொவிட்- 19 என்ற தீநுண்மி (வைரஸ்) கொள்ளை நோயைப் பரப்புகிறது. கொவிட்- 19 என்ற தீநுண்மி (வைரஸ்) கொள்ளை நோயில் இருந்து மக்களைக் காக்க இறைச்சிக் கடைகள் அனைத்தையும் உடனடியாக மூடுங்கள்.

இத் தீநுண்மியின் தொடக்கவிடம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஓர் இறைச்சிக்கடை எனச் சீன அரசு அறிவித்தது. அத்துடன் இறைச்சி உணவைத் தவிருங்கள் எனச் சீன ஜனாதிபதி தனது மக்களைக் கேட்டிருந்தார்.

கொவிட்- 19 தீநுண்மியின் கொள்ளை நோய்த் தாக்கத்தைக் குறைக்க இந்தியாவின் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் கோழிரூபவ் ஆடு, மாடு இறைச்சிக் கடைகளை மூடுமாறு ஆணை இடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையிலும் வேகமாகப் பரவிவரும் கோவிட்டு தீநுண்மியின் கொள்ளை நோய்த் தாக்கத்தைக் குறைக்க இலங்கை முழுவதும் இறைச்சிக் கடைகளை உடனடியாக மூடுமாறு ஆணையிட வேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்பது மாகாணங்களிலும் உள்ள உள்ளூராட்சித் திணைக்கள ஆணையர் ஒன்பதின்மரும் உடனடியாக ஆணை இட்டு உள்ளூராட்சி அமைப்புகள் உரிமம் வழங்கிய இறைச்சிக் கடைகளை மூடுமாறும் கோருகின்றேன் என்றுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap