சிறுபோக செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மானிய உரம் வழங்க நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான மானிய உரத்தை எதிர்வரும் திங்கட்கிழமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெரும்பாக உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இரணைமடுக்குளம் உள்ளிட்ட பாரிய மற்றும் நடுத்தர சிறுகுளங்கள் என்பவற்றின் காணப்படுகின்ற நீரின் அளவைக்கொண்டு மாவட்டத்தில் 21ஆயிரம் ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் அவற்றுக்கான உரம் உரிய காலப்பகுதியில் கிடைக்குமா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.

கிளிநொச்சி கமநலசேவை நிலையத்தின் கீழ் பயிர்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான மானிய உர விநியோகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பெரும்போக உத்தியோகத்தர்,

நாட்டில் தற்போதைய நிலைமையினைக் கருத்திற் கொண்டு விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய வகையில் கட்டம் கட்டமாக உரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போதைய அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு ஒவ்வொரு விவசாய அமைப்புக்களுக்கும் நாட்கள் ஒதுக்கி மக்களை ஒன்றுகூடாதவாறும் நோய்த்தொற்றை தவிர்க்கும் விதத்திலும் உர விநியோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை பெரியபரந்தன் கமக்கார அமைப்புக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

தொடர்ந்து வாரநாட்களில் ஏனைய கமக்கார அமைப்புக்களுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap