சர்வதேச நாணய நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை போன்ற நாடுகளுக்கு நிவாரணம் வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் Tedros Adhanom உடனான தொலைபேசி கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொரோனா ஒழிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தொலைபேசி உரையாடல் தொடர்பில் டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலினால் ஆசிய பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் சுகாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறை, ஏற்றுமதி, வௌிநாட்டில் தொழில்புரிபவர்களுக்கு கிடைக்கும் வருமானம் மற்றும் கடன், பங்குச் சந்தையில் சர்வதேச முதலீடுகளில் தங்கியுள்ள கொரோனா தொற்றினால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

கடனை இரத்துச் செய்தல் அல்லது கடனை திருப்பிச் செலுத்தல் தொடர்பான விடயங்களுக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், உலக வங்கியின் தலைவர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மற்றும் கடன் வழங்கும் முன்வரிசை நாடுகளின் தலைவர்கள் ஆகியோரை இணைத்துகொள்ளுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap