கொரோனா தொற்று ; யாழ் வைத்தியசாலையில் விசேட சிகிச்சை முன்னேற்பாடுகள் ஆரம்பம்

கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வைத்தியசாலையின் ஒருபகுதி தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா தொற்று என சந்தேகப்படக்கூடிய நோய் அறிகுறிகளுடன் வருபவர்களை அனுமதிக்கவும், பரிசோதிக்கவும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் தேவையான ஏற்பாடுகளுடன் இயங்கி வருகிறது.

கொரோனாத்தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான சிகிச்சையை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கும்,செயற்படுத்துவதற்கும் ஒரு ஆலோசனைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தொற்றுப்பரவலை தடுத்தல், சுயபாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு போன்றவற்றில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றது.

கொரோனா அபாய நிலைமையிலும் அத்தியாவசிய சிகிச்சைகளும், தீவிரமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சைகளும் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.

Share via
Copy link
Powered by Social Snap