மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவித்தல்!

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு தொழிற்சாலைகள், விவசாயம் மற்றும் வியாபார நடவடிக்கைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கான சிபாரிசுகளை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (15) மதியம் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

மாகாண மட்டத்தில் கிடைக்கும் சிபாரிசுகளை கருத்திற்கொண்டு தற்போது விதிக்கப்பட்டுள்ள வரையறைகளை தளர்த்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

மாகாண மட்டத்தில் தகவல்களை திரட்டுவதற்காக ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சர் மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

உள்நாட்டு பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாளாந்த பொருளாதார செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான இயலுமை தொடர்பில் ஆராய்வதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடைமுறைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

தனிமைப்படுத்தும் நிலையங்களின் தற்போதைய நிலைமை மற்றும் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்துகொண்டார்.

நாட்டின் சுகாதார நிலைமையை மேம்படுத்துவதற்காக எடுக்கப்படவேண்டிய நடைமுறைகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமையை மீளாய்வு செய்வதற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டுமென இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap