
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவினால் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பாரதூரமானது எனவும் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்றானது சகல நாடுகளினதும் தேசிய பொருளாதாரத்தை மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெர் எப்போதும் இல்லாத வகையில் சிக்கலுக்குள்ளாகியுள்ளதாக அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் சர்வதேச சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு உலகளாவிய ரீதியாக தலைமைத்துவம் வழங்க எந்தவொரு அமைப்பும் இல்லாத நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் தமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வது அத்தியாவசியமானதாகும் என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கொரோனா வைரசை உரிய வகையில் முகாமைத்துவம் செய்ய முடியாது போனதாக உலக சுகாதார ஸ்தாபனத்தை குற்றம் சுமத்தி நிதியுதவி வழங்குவதை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தால் உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து உதவிகளை பெறும் இலங்கை போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கும் என ரணில் விக்ரமசிங்க அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் மனிதாபிமானம் கருதி கொவிட் 19 வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்களை கருத்திற் கொண்டு மீணடும் தமது தீர்மானத்தை ஆராய்ந்து பார்க்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்க ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.