பொது போக்குவரத்தின் போது சமூக இடைவௌியை பேணுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!

ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் பஸ் மற்றும் ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிக சுகாதாரப் பாதுகாப்புடன் 5000 பஸ்களும் 400 ரயில்களும் சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது.

இதனடிப்படையில், முகக்கவசம் மற்றும் கையுறைகளை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் உள்ள பிரதான பஸ் தரிப்பு நிலையங்களில் கிருமி தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பெருந்தெருக்கள் சிலவற்றில் நேற்று கிருமித் தொற்று நீக்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

இன்று முதல் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசிய சேவையை முன்னெடுக்கின்ற அரச மற்றும் தனியார் துறையினரே ரயிலில் பயணிக்க முடியும் என ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதனைத் தவிர ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே பற்றுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்யும் போதும் ரயில் மேடைகளில் நிற்கும் போதும் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணுமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு ரயில் பெட்டியில் பயணிக்கக் கூடிய பயணிகளின் தொகை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர ரயிலில் பயணிக்கும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் துப்புவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இருமல் , காய்ச்சல் மற்றும் தடிமனுக்கு உள்ளாகியிருந்தால் ரயிலில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap