ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இலங்கையை விட்டு முற்றாக நீங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டே, ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களிலுள்ள மக்கள் செயற்படுகின்றனர் என்றும் எனவே, நாடு, குடும்ப உறவுகளைக் கருத்திற்கொண்டேனும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளவுள்ள விசேட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள, சுகாதார அமைச்சினால் உருவாக்கப்பட்டள்ள சிறப்பு செயற்றிறன் சீராய்வுக் குழுவின் கூட்டம், நேற்று (22) இடம்பெற்றது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்துரைத்த அவர்,

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில், ஓட்டோக்களில் முண்டியடித்துக்கொண்டு மூவருக்கும் மேற்பட்டோர் பயணிப்பதை அவதானித்து வருவதாகவும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது, சமூக இடைவெளிகளைப் பேணாது மக்கள் நடந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டுக்காகவும் நாட்டு மக்களின் நிலைமைகளைக் கருத்திற்கொண்டுமே, சில மாவட்டங்களில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையை விட்டு இன்னும் நீங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

எனவே, குடும்ப உறவுகள், பிள்ளைகளின் நலனுக்காவும் சுகாதார பிரிவு விடுக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி கொவிட் 19 தாக்கம் இலங்கையை விட்டு முற்றாக நீங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, இலங்கை வரலாற்றில் மிகவும் குறிகிய காலத்துக்குள், நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொடுத்த காலமாக இது அமைந்துள்ளது என்றும் சமுர்த்தி திட்டத்தினூடாக 25 இலட்சம் குடும்பங்களுக்கு, தலா 5,000 ரூபாயை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அதற்கும் மேலதிகமாக, கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த 19 இலட்சம் குடும்பங்களுக்கு, 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கொடுப்பனவை, பயனாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு உதவிய அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கம் நன்றித் தெரிவித்துக்கொள்வதாக, அவர் இதன்போது தெரிவித்தார்.

Share via
Copy link
Powered by Social Snap