பல்கலைக்கழகங்கள் மீள திறப்பு: மாணவர்கள் செல்ல முற்றாகத் தடை!

கொரோனா வைரஸ் ​தொற்று ஆபத்து குறைந்த, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில், கல்வி, கல்விசாரா ஊழியர்களுக்காக மீள பல்கலைக்கழகங்களை திறக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதோடு, மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதுத் தொடர்பில் கருத்து தெரிவித்த அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கல்வி, கல்விசாரா ஊழியர்களின் ஆய்வு நடவடிக்கைகளுக்காக மாத்திரம், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மீள பல்கலைக்கழகங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதென்றார்.

அரசாங்கத்தின் அறிவிப்புக்களுக்கு அமையவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இவ்வாறு தீர்மானித்துள்ளதாகவும், மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதெனவும், இணையங்களூடாக மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளைத் தொடர முடியுமெனவும் அவர் கூறினார்.

இதற்கான சுற்றரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், பல்கலைக்கழகங்களுக்குள் கல்வி, கல்வி சாரா ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பான விசேட சுற்றரிக்கை ஒன்று விரைவில் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கொரானா தொற்றுக் காரணமாக அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து மூடப்படுமெனவும் அவர் கூறினார்.

Share via
Copy link
Powered by Social Snap