நேற்றைய தினம் மாத்திரம் 63 பேருக்கு கொரோனா தொற்று..!

நாட்டில் நேற்றைய தினம் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

நாட்டில் நேற்றைய தினமே அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 10 பேர் கடற்படையினர் என்பதுடன், ஒருவர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், நேற்றைய தினம் இரண்டு பேர் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 396 பேர் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, சீதுவ சீதுவை இராணுவ விசேட அதிரடி படைப்பிரிவு முகாமின் கெப்டன் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமில் சேவையாற்றும் தனது மனையிவிடமிருந்து, அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதிவரை சீதுவை இராணுவ விசேட அதிரடி படைப்பிரிவு முகாமை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீதுவை பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் குமார் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பனாகொடை இராணுவ முகாமில் தொண்டர் பணியாற்றிய அலவ்வ பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபருக்கு சிகிச்சை வழங்கிய அந்த பகுதியைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் மற்றும் மருந்தகத்தில் கடமையாற்றிய சிலரும் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அதிகளவான தொற்றுறுதியாளர்கள் கொழும்பு – பண்டார நாயக்க மாவத்தையில் பதிவாகியுள்ளனர்.

இதுவரை குறித்த மாவத்தையில் மாத்திரம் 97 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap