ஆஸ்கர் விருது வழங்கும் விதிமுறைகளில் தற்காலிக மாற்றம்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஆஸ்கர் விருது வழங்கும் விதிமுறைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஹொலிவுட் திரையுலகின் கௌரவமிக்க விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருது கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்தாண்டு ஆஸ்கர் விருது நிகழ்ச்சி பெப்ரவரி 28 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு விட்டதால், படங்களை நேரடியாக OTT தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற அச்சம் நிலவி வந்தது. ஏனெனில், குறைந்தபட்சம் ஒரு வாரமாவது திரையரங்குகளில் திரையிடப்பட்ட படங்கள் தான் ஆஸ்கருக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்நிலையில், கொரோனா காரணமாக அந்த விதியில் ஆஸ்கர் குழு தற்காலிக மாற்றம் செய்துள்ளது. அதன்படி, நேரடியாக இணையத்தளங்களில் வெளியாகும் படங்களையும் ஆஸ்கர் விருதிற்கு அனுப்பி வைக்க முடியும்.

ஆனால், அந்த படங்கள் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்ட படங்களாக இருக்க வேண்டும். நேரடியாக இணையத்தளங்களில் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட படங்களாக இருக்கக்கூடாது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த விதிமுறை தளர்வு தற்காலிகமானது தான் என்றும், கொரோனா பிரச்சினை முடிவிற்கு வந்ததும் பழைய விதிமுறையே பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap