பெருந்தோட்ட மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பி்ல் வே.இராதாகிருஷ்ணனின் முக்கிய கோரிக்கை!

பெருந்தோட்ட மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்கள் அசமந்த போக்குடனேயே செயற்படுகின்றன.

தற்பொழுது நாட்டின் அநேகமான தொழில்துறை முடங்கியுள்ள இந்த அசாதாரணமான சூழ்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மாத்திரமே தமது தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான ஒரு நிலையில் அவர்கள் தங்களுடைய வேலை செய்கின்ற இடங்களில் முககவசம் அணிவதில்லை

அத்துடன் தேயிலை அளவிடும் பொழுதோ சமூக இடைவெளி என்பன பேணப்படுவதில்லை.

இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு கிருமி தொற்று ஏற்படுவதற்கான அபாயகரமான நிலை காணப்படுகின்றது.

எனவே இது தொடர்பாக தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கே உள்ளது.

ஆனால் எந்தவொரு பெருந்தோட்ட நிறுவனமும் இது தொடர்பாக அக்கறை எடுத்து செயற்படுவதாக தெரியவில்லை.

அவர்கள் அசமந்த போக்குடனேயே செயற்படுவதை காண முடிகின்றது.

ஆனால் பெருந்தோட்ட காரியாலயங்களில் அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

எனவே இதே வசதிகளை தோட்ட தொழிலாளர்களுக்கும் செய்து கொடுப்பதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன் வரவேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை கொழும்பில் இருந்து மலையகத்தின் பல பாகங்களுக்கும் சென்றுள்ள இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.சதாசிவம் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறித்து வலியுறுத்தப்பட்டதாக அவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

Share via
Copy link
Powered by Social Snap