
கொவிட் 19 தொற்று நிலைமைக்கு ஏற்புடைய நிதி ரீதியான வெளிநாட்டு உதவிகள் எதுவும் எமது நாட்டிற்குக் கிடைக்கப் பெறவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நேற்றைய தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுறுதியான முதலாவது நோயாளி கண்டறியப்பட்ட முதல் வைரஸைத் தடுப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன் நோயினைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுத்துச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் உளவுப் பிரிவினரால் இதன்போது தெளிப்படுத்தப்பட்டது.
வெளிநாட்டு உதவிகள் கிடைப்பது மற்றும் அவற்றை செலவிடுவது தொடர்பாக எதிர்க்கட்சியினரால் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதால், அது தொடர்பாக முறையான தெளிவுபடுத்தல் அவசியமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு உதவிகள் தொடர்பான சரியான தகவல்களைத் தெரிவிக்கும் ஆற்றல் நிதியமைச்சின் செயலாளருக்கே உள்ளதாக பிரதமர் இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த நிதியமைச்சின் செயலாளர்
எஸ்.ஆர். ஆடிகல, உலக வங்கி தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக 127 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்க இணங்கி, அதற்கு ஏற்புடைய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எனினும் அந்த நிதி எமது நாட்டுக்கு கிடைக்கவில்லை எனவும் ஏற்புடைய நிதி எதிர்காலத்தில் கிடைக்கவுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சு மற்றும் கொவிட் 19 தொற்று தொடர்பான செலவினங்களை ஈடு செய்வதற்கு அந்த நிதி கிடைப்பதாகவும், அதற்கு மேலதிகமாக பொருள் ரீதியான வெளிநாட்டு உதவிகள் சுகாதார
அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தொழில் நிமித்தம் கொழும்புக்கு வந்து, கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக வீடுகளுக்கு செல்ல முடியாமல் தங்குமிடங்களில் சிக்கியுள்ள வடக்கு, கிழக்கு மக்கள், தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்காக முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்து வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.
அத்துடன் அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணத் தொகையை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக அவர் கூறினார்.