கனவு நினைவாகும் முன்பே உயிரிழந்த கொரோனா பணியில் இருந்த இளம்பெண் மருத்துவர்!!

தமிழகத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் விபத்தில் மரணமடைந்தார். பெரம்பலூரைச் சேர்ந்த டெய்லர் தமிழ்மணி தனது சொற்ப வருமானத்தில் தனது மகள் அகிலாவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க வைத்தார்.

பெரும் சிரமங்களுக்கு இடையே எம்பிபிஎஸ் இறுதியாண்டு முடித்த அகிலா ஓராண்டு பயிற்சி மருத்துவராகவும் பணிபுரிந்தார். மார்ச் 28-ம் திகதியுடன் பயிற்சி மருத்துவர் பணி முடிந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க, அவரை மேலும் ஒரு மாதம் பணியை நிர்வாகம் நீடித்துள்ளது.

அதனால் கடந்த வாரம் பயிற்சி முடித்ததற்கான சான்றை பெற பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரும், அவரது நண்பர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபஞ்சனும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

சான்று பெற்று கொண்டு திரும்பியபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஏனாதியைச் சேர்ந்த கருப்பணன் படுவேகமாக மோதினார். இதில் இரத்த வெள்ளத்தில் காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி அகிலா இன்று இறந்தார். பிரேத பரிசோதனை முடித்து உடல் பெரம்பலூர் செல்கிறது. ஏழ்மை குடும்பத்தில் டெய்லரின் மகளாக பிறந்து, அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்து 5 ஆண்டு நிறைவு செய்து, தந்தையின் கனவினை நினைவாக்கும் முன்பே அகிலா இறந்தது சக மருத்துவர்களையும், அவரது உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap