
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கள் அனைத்து துறைகளும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. விவசாய பணிகளுக்கு அரசு அனுமதி அளித்தலும், விளை பொருட்களுக்கு வாங்க ஆளில்லாததால் அவை வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த வாழை விவசாயி ஒருவர், அறுவடை செய்ய வழியின்றி தவித்து வருவதாக வீடியோவில் கூறி இருந்தார். அந்த வீடியோவை கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் இரா.சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதை அறிந்த, நடிகரும் இயக்குனருமான சசிகுமார், அந்த வாழை விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் பண உதவி செய்திருக்கிறார். ஆனால் அந்த விவசாயியோ “சசி சார் உதவியா கொடுத்தாலும் அதை கடனா நினைச்சு, அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்குத் திருப்பிக் கொடுப்பேன்” என கூறியுள்ளார்.
தனது பதிவை பார்த்து விவசாயிக்கு பண உதவி செய்த சசிகுமாரின் நல்ல மனம் வாழ்க என இயக்குனர் இரா.சரவணன் டுவிட்டரில் வாழ்த்தி உள்ளார். இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.