இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள அஜித் பட நாயகி!

5 ஸ்டார் என்ற படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானாலும் கனிகா அதிகப் புகழ் பெற்றது மலையாளத் திரை உலகில்தான். பல ஹிட் படங்களில் நடித்த அவர் திருமணத்துக்குப் பின் நடிப்பிலிருந்து விலகினார்.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் மகனுடன் சில வீடியோக்களை வெளியிட்டு வந்த கனிகா, தற்போது ஒரு குறும்படத்தை முதன்முறையாக இயக்கியுள்ளார். மா என்று பெயரிடப்பட்ட அந்த ஷார்ட் ஃப்லிமை மிகவும் பொருத்தமாக அன்னையர் தினத்தன்று வெளியிட்டார் கனிகா.

ஐந்து நிமிடம் இருபது நொடிகள் ஓடக் கூடிய இந்த குறும்படத்தில் தாயின் சிறப்புக்களை வாய்ஸ் ஓவர் மற்றும் பின்னணி இசையுடன் நெகிழ்ச்சியாக எடுத்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர் கூறியிருப்பது,

ஒரு தாயின் தோற்றத்தினாலோ அவளது நடவடிக்கைகளினாலோ ஒருபோதும் அவளை தீர்மானிக்க வேண்டாம் … அவள் என்னவிதமான கஷ்டத்தில் இருக்கிறாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.

எல்லா அம்மாக்களுக்கும், அம்மாவாகப் போகிற அம்மாக்களுக்கும், அனைத்து சிங்கிள் மதர்ஸுக்கும், கண்ணாடியில் உங்களை ஒரு முறை பார்த்து புன்னகைத்து, என்ன ஒரு அற்புதமான பெண் நீங்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய அனைத்து அம்மாக்களுக்கும்’ என்று பதிவிட்டு தனது குறும்படத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் கனிகா.

Share via
Copy link
Powered by Social Snap