இறந்தவர்களின் சடலத்தில் கொரோனா வைரஸ் வாழும் நேரம்… வெளியான புதிய தகவல்!

உயிரிழந்தவர்களின் உடலில் கொரோனா வைரஸ் உயிர் வாழும் நேரம் படிப்படியாக குறைந்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட முறையான பாதுகாப்பு விதிமுறைகள் இந்தியாவில் கடைபிடிக்கப்படுகின்றன.
இந்த சூழலில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடற்கூறு ஆய்வு செய்வது தொடர்பாக மருத்துவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் உடலில் அந்த வைரஸ் எவ்வளவு நேரத்துக்கு பின்னர் செயலிழக்கும் என்று கூற முடியாது என்றும் ஆனால், சடலத்தில் அது உயிர் வாழும் நேரம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுளளது.

அதேநேரம் மருத்துவர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகாமல் இருக்க பிரேத பரிசோதனை செய்யும் போது ஹைபோகுளோரைட் அல்லது 70 சதவீதம் ஆல்கஹால் கொண்ட திரவ நிலை சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

ஏனெனில், பிரேத பரிசோதனையின் போது, நாசி மற்றும் வாய்வழி துவாரங்களின் மூலம் சடலத்தில் இருந்து வெளியாகும் வாயு அல்லது திரவங்களில் உள்ள மியூகோசலின் மேற்பரப்புகள் இயற்கையான சுழற்சியின் மூலம் வெளியேற்றப்படுகிறது.

இவற்றின் மூலம் உடற்கூறு செய்யும் மருத்துவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. மேலோட்டமாக பயன்படுத்தும் கிருமி நாசினி மட்டுமே முழு பாதுகாப்பு வழங்கும் என்று கூற முடியாது என்று மருத்துவ கவுன்சில் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சடலங்களை அப்புறப்படுத்துவதற்கு குறிப்பிட்ட ஊழியர்களை மட்டுமே மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். ஆள் பற்றாக்குறை நிலவும்பட்சத்தில் கூடுதல் ஊழியர்களை மருத்துவமனைகள் பணி அமர்த்தி கொள்ளலாம் என்றும் இதற்கு அரசு சாரா அமைப்புகள், தொண்டு நிறுவனங்களை மருத்துவமனை நிர்வாகம் அணுகலாம் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்த ஊழியர்களுக்கும் தொற்று பரவாத கிருமிநாசினிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வைரஸ் பாதித்த சடலங்களை மற்ற சடலங்கள் உள்ள பிணவறையில் வைக்க கூடாது என்றும் இட பற்றாக்குறை காரணமாக அப்படி வைக்க நேர்ந்தால், ஊழியர்கள் முழு கவச உடையுடன், அதனை இரண்டு பாலிதீன் கவர்கள் கொண்ட உறையினால் சுற்றி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap