பிரிட்ஜில் எந்தெந்த பொருட்களை எப்படி வைக்க வேண்டும் தெரியுமா?…. சில தருணங்களில் விஷமாகவும் மாறலாம் ஜாக்கிரதை!

தவறான முறையில் பொருட்களை வைப்பதால் ஃபிரிட்ஜ் துர்நாற்றம் வீசும். இதனால் கிருமிகள் உள்ளேயே சுற்றிக்கொண்டு மற்ற உணவுப் பொருட்களையும் பாழாக்கும்.

பிரிட்ஜில் சில பொருட்களை இப்படிதான் வைக்க வேண்டும் என்று உள்ளது. அவற்றை தவறான முறையில் வைப்பதால் ஃபிரிட்ஜ் துர்நாற்றம் வீசும். இதனால் கிருமிகள் கூட உள்ளேயே சுற்றிக்கொண்டு மற்ற உணவுப் பொருட்களையும் பாழாக்கும்.
இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் உங்களுக்கே விஷமாகவும் மாறலாம்.எனவே ஃபிரிட்ஜைப் பயன்படுத்துவதிலும் கவனமாக இருப்பது அவசியம்.

காய்கறிகளை வாங்கி வந்தால் அவற்றை தனித்தனியாக கவரில் போட்டு கட்டி வையுங்கள். அப்படியே வைக்காதீர்கள். அழுகுவதுபோல் ஏதேனும் இருந்தால் அதை ஃபிரிட்ஜில் அல்லாது வெளியே வையுங்கள்.

கொத்தமல்லி, பச்சைமிளகாய், புதினா, கறிவேப்பிலைகளை அப்படியே வைக்காமல் அதற்கென ஒரு டப்பா பயன்படுத்தி அதில் போட்டு வையுங்கள். அப்போதுதான் அது எப்போது திறந்தாலும் ஃபிரெஷாகவும் , மணம் மாறாமலும் இருக்கும்.

இஞ்சியில் மண் இருந்தால் தண்ணீரில் அலசி அப்படியே வையுங்கள். மூடி வைத்தால் பூஞ்சைகள் உருவாகும்.
தேங்காயை அப்படியே மூடியோடு வைக்காமல் துருவி டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இதனால் அவசரத்திற்கு சமைக்கும்போதும் உதவியாக இருக்கும்.

சீஸ், பட்டர் போன்ற பால் சார்ந்த பொருட்களை அப்படியே வைக்காதீர்கள். அலுமினிய பேப்பரால் சுருட்டி அதற்கென ஒரு டப்பா பயன்படுத்துங்கள்.

மல்லிகை பூ அல்லது மற்ற எந்த பூவாக இருந்தாலும் அதை அப்படியே வைக்காதீர்கள். அதற்கும் காற்று வெளியேறாதவாறு டப்பா பயன்படுத்தி வையுங்கள். இல்லையெனில் அந்த வாசனை ஃபிரிட்ஜிற்குள்ளேயே சுற்றிக்கொண்டு மற்ற உணவுப் பொருட்களிலும் அந்த வாசனையே வீசும்.

பழங்களை மூடி வைக்காமல் டிரே பயன்படுத்தி அதில் காற்றோட்டமாக வையுங்கள். மூடி வைக்க விருப்பப்பட்டால் சல்லடை போல் ஓட்டைகள் கொண்ட டப்பாவில் போட்டு வையுங்கள். இல்லையெனில் அழுகி விட வாய்ப்பு அதிகம்.
தோசை மாவு அரைத்து ஃபிரிட்ஜில் வைத்தாலும் மூடாமல் வைக்காதீர்கள். அதற்கென டப்பா பயன்படுத்தி அதில் போட்டு இறுக மூடி வையுங்கள்.

மீதமானஉணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கும்போதும் மூடி வையுங்கள். முடிந்த வரை மறுநாளே வெளியே எடுத்து பயன்படுத்திவிடுங்கள்.

வாரம் ஒரு முறை ஃபிட்ஜை துடைத்து வையுங்கள் அல்லது தேவையற்ற பொருட்கள் என்னென்ன உள்ளன, நீண்ட நாட்களாக இருக்கும் பொருட்கள் என்ன என பார்த்து அவற்றை வெளியேற்றுங்கள்.

ஃபிரிட்ஜின் பின்புறம் கீழே வெளியேறும் தண்ணீரை அடிக்கடி வெளியேற்றி கழுவி வையுங்கள். அதுவும் கழிவு நீர் என்பதால் தேக்கி வைப்பது கிருமிகளை உற்பத்தியாக்கும். அதனாலும் தொற்றுகள் வரலாம்.

Share via
Copy link
Powered by Social Snap