எனக்கு comeback-ஆ? ரஜினி படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா – லெட்டர் ஃப்ரூஃப் இதோ!

சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் கொடி கட்டிப் பறந்தவர் ஜெயலலிதா. 1980-களில் ஒரு குறிப்பிட்ட ஊடகத்தில் வெளிவந்த ஒரு செய்தியை அவரால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை, திரைப்படங்களில் மீண்டும் நடிப்பதற்கு அவர் ஆசைப்படுவதாக அதில் எழுதப்பட்டிருந்தது. அவர் உடனடியாக அந்த செய்தியை எழுதிய பத்திரிகையாளருக்கு மறுப்புக் கடிதம் ஒன்றை அனுப்பினார்,

அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட அக்கடிதத்தில் தான் திரைப்படத் துறையிலிருந்து விலகிவிட்டதாகவும், நிச்சயமாக வாய்ப்புக்கள் கிடைக்காததால் அல்ல. விருப்பத்தின் பேரில் தான் விலகினேன் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

‘மீண்டும் திரைபடங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. நான் படங்களில் நடிக்க போராடி வருகிறேன் என்ற இந்தத் தவறான எண்ணத்தை நீங்கள் எவ்வாறு பெற்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கிறது. உண்மையில், நான் சில சிறந்த வாய்ப்புக்களை நிராகரித்து வருகிறேன். ரஜினிகாந்திற்கு ஜோடியாக தயாரிப்பாளர் பாலாஜியின் ‘பில்லா’ படத்தில் கதாநாயகி வேடம் முதலில் எனக்குத்தான் வழங்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாது.

நான் மறுத்த பிறகுதான், பாலாஜி ஸ்ரீப்ரியாவை அந்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்தார். இன்று இந்தியாவில் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்களில் பாலாஜி ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும், ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார். அத்தகைய வாய்ப்பையே நான் நிராகரித்திருக்கிறேன் என்றால், நான் திரும்பி வருவதற்கு குறைந்தபட்சம்கூட போராடவில்லை என்பதை இது உறுதியாக நிரூபிக்கிறது அல்லவா?

கடவுளின் ஆசிர்வாதத்தில், நான் மிகவும் நன்றாக இருக்கிறேன், என்னால் தொடர்ந்து ஒரு ராணியைப் போல வாழ முடியும் ..’ இவ்வாறு அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதா முதல் அமைச்சராகவோ அரசியல்வாதியாகவோ ஆவதற்கு முன்னால் இந்தக் கடிதம் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap