கர்ப்பிணி பெண்ணை அழைத்து சென்ற ஆம்புலன்ஸை வழிமறைத்த 4 சிங்கங்கள்.. அதிர்ந்துபோன உதவியாளர்கள்!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி இருப்பதால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவது அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் ஹைதராபாத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தவரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு நேற்று இரவு பிரசவ வழி ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த ஆம்புலன்ஸ் வாகனம், அவரை அழைத்துக் கொண்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஆம்புலன்ஸை வழிமறித்து சூழ்ந்துகொண்ட 4 சிங்கங்கள் அவர்களை செல்ல விடாமல் அங்கேயே சுற்றித்திரிந்தன.இதனால் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணிற்கு மருத்துவ உதவியாளர்களுடன் ஆம்புலன்சிலேயே பிரசவம் நடைபெற்று குழந்தை பிறந்தது.

சுமார் 20 நிமிடங்கள் அங்கேயே நின்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம், பின்னர் சிங்கங்கள் சென்றவுடன் இயக்கப்பட்டு அப்பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதன் பின்னர் தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது ஆம்புலன்ஸை சூழ்ந்திருந்த சிங்கங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

ஊரடங்கு காலம் என்பதால் வனவிலங்குகள் அதிகளவில் ஊருக்குள் வருவதாகவும், அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கவனத்துடன் செல்லுமாறும் அப்பகுதி போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap