பாம்பை கடிக்கவைத்து கொலை செய்யப்பட்ட பெண்… பாம்பு பிடிப்பவரின் பகிரங்க வாக்குமூலம்!.. பதறவைக்கும் பின்னணி

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் உத்ராவை அவரது கணவர் சூரஜ் பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

2018-ம் ஆண்டு உத்ராவுக்கும் சூரஜுக்கும் திருமணம் நடந்தது. அதன்பிறகு அவர்களுக்கு ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் 2-ம் தேதி அணலி பாம்பு கடித்த நிலையில் உயிர்தப்பினார் உத்ரா. அவரது அம்மா வீட்டில் மருத்துவ சிகிச்சையில் இருந்த சமயத்தில் சூரஜ் பாட்டிலில் எடுத்து வந்த கருமூர்க்கன் (கருநாகம்) பாம்பை விட்டு உத்ராவைக் கடிக்க வைத்து கொலை செய்துள்ளார்.

சூரஜின் செல்போனை சோதனை செய்ததில் பாம்பு பிடிக்கும் சுரேஷ் என்பவருடன் அவர் அடிக்கடி பேசியது தெரியவந்ததால் பொலிசாரிடம் வசமாகச் சிக்கினார்.

மேலும், சூரஜ் பாம்பு கொண்டு சென்ற பிளாஸ்டிக் பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்ராவை கடித்த பாம்பை அப்போது உறவினர்கள் அடித்துக் கொன்றார்கள். அந்தப் பாம்பும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாம்பு பிடிக்கும் சுரேஷ் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்லுவாதக்கல்லைச் சேர்ந்த சுரேஷ் பாம்பு பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டவர் அல்ல. ஸ்கூல் வேன் டிரைவராகப் பணிபுரிந்து வந்துள்ளார். 2017ம் ஆண்டு முதல் அவர் பாம்பு பிடிப்பது குறித்தும், பாம்பைப் பிடித்தால் அது கடிக்காமல் இருப்பதற்காக எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் யூடியூப் இணையதளத்தைப் பார்த்து கற்றுக்கொண்டார்.

பாம்பு பிடித்தல், பாம்பைக் கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு வேடிக்கை காட்டுவது ஆகியவற்றை வீடியோவாக யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

சுரேஷின் இந்தப் பதிவுகளைப் பார்த்துதான் சூரஜ் அவரை போனில் தொடர்புகொண்டுள்ளார். வீட்டில் எலித்தொல்லை இருப்பதால் எலி பிடிக்க ஒரு பாம்பு வேண்டும் என சூரஜ் கேட்டுள்ளார்.
அப்போது சுரேஷ் தன்னிடம் இருந்த அணலி வகை பாம்பை சூரஜின் வீட்டுக்குக் கொண்டுவந்தார். எலி பிடிக்க பாம்பை எப்படி கையாள வேண்டும் என்பதை சுரேஷ் சொல்லிக்கொடுத்தார்.

பின்னர் பாம்பை மறுநாள் வந்து வாங்கிக்கொள்வதாகக் கூறிவிட்டு சுரேஷ் சென்றார். அப்போது சூரஜ் அந்தப் பாம்பைக் கொண்டு ஒரு எலியைக் கடிக்க வைத்துள்ளார். எலி இறந்ததால் பாம்பு விஷத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்துகொண்டார்.
மறுநாள் சுரேஷ் பாம்பை திருப்பிக் கேட்டதற்கு அது தப்பி ஓடிவிட்டது என சமாளித்துள்ளார் சூரஜ். அந்தப் பாம்பைக் கொண்டுதான் மார்ச் 2ம் தேதி உத்ராவைக் கடிக்க வைத்துள்ளார். அப்போது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதால் அவர் உயிர்தப்பிவிட்டார்.

பின்னர், இரண்டு மாதத்திற்குப் பிறகு சுரேஷை அழைத்த சூரஜ், தங்கள் விவசாய நிலத்தில் எலித்தொல்லை இருப்பதாகவும் அதற்காக அதிக விஷம் கொண்ட கருமூர்க்கன் பாம்பு வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

சுரேஷ் அடூர் பகுதிக்கு காரில் பாம்பைக் கொண்டுவந்துள்ளார். அங்கு சென்ற சூரஜ் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பாம்பை விலைக்கு வாங்கியுள்ளார். அதன்பிறகு சூரஜின் மனைவி உத்ரா பாம்பு கடித்து இறந்த செய்தியை சுரேஷ் பத்திரிகைகளில் பார்த்தார். அடித்துக் கொல்லப்பட்ட அந்தப் பாம்பின் புகைப்படத்தைக் கண்ட சுரேசுக்கு அது தான் கொடுத்த கருமூர்க்கன் வகை பாம்பு என்பதும் புரிந்தது.

இதனால் பதற்றமடைந்த சுரேஷ் இதுகுறித்து குடும்பத்தினரிடம் புலம்பியுள்ளார். இதுபற்றி பொலிசில் கூறிவிடுங்கள் என சுரேஷின் மகன் சனல் சொல்லியிருக்கிறார். பொலிசாரிடம் சென்றால் இந்தக் கொலைப்பழி தன்மீது விழுந்துவிடும் என்பதால், அப்போதைக்கு அமைதியாக இருந்துவிட்டார். ஆனாலும், போலீஸ் விசாரணையில் சிக்கிக்கொண்டார். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது சட்ட விரோதமாக பாம்பை வைத்திருந்தது, அதைப் பணத்துக்காக விற்பனை செய்தது குறித்து வனத்துறையினரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அரியவகை பாம்பான கருமூர்க்கன் (கருநாகம்) எப்படி சுரேஷுக்குக் கிடைத்தது என்பது பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது. பாம்பு பிடிப்பதில் ஆர்வம் கொண்ட சுரேஷ் கடைசியில் தான் பிடித்த பாம்பால் சிறையில் சிக்கிக்கொண்டுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap