கொரோனாவினால் மீண்டும் சேர்ந்த உயிர் நண்பர்கள்!… இறுதியில் உயிரையே விட்ட சோகம்

தற்போது வளர்த்து வரும் தலைமுறை இளைஞர்களிடம், சகிப்புத் தன்மை போன்ற குணங்கள் மிகவும் குறைந்து வருகிறதா, என்ற கேள்வி சமீபத்தில் நடக்கும் சம்பவங்கள் எழுப்புகின்றன. அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் யோகரத்தினம் நகரைச் சேர்ந்தவர்கள் பூச்சிமுத்து மற்றும் அஜித்குமார் உயிர் நண்பர்களான இருவரும், வெளியூரில் வேலை செய்து வந்துள்ளார்கள். பூச்சிமுத்து, கோவையில் பால் வியாபாரம் செய்து வந்த நிலையில், அஜித் குமார் சென்னையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பூச்சிமுத்து, அஜித்குமார் ஆகிய 2 பேரும் தங்களது சொந்த ஊருக்கு வந்தனர்.

ஊருக்கு வந்த இருவரும் அவ்வப்போது சந்தித்து ஒன்றாக மது குடித்து வந்துள்ளார்கள். இந்த சூழ்நிலையில் ஊர் பகுதிகளில் தற்போது ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளதால், வேலைக்குச் செல்லலாமே என இருவரின் பெற்றோர்களும் கூறியுள்ளார்கள். ஆனால் அதனைக் காதில் வாங்காமல் இருவரும் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் வேலைக்குப் போகாமல் மது குடித்து வந்த இருவரையும் அவரது பெற்றோர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள்.

இதனால் இருவரும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்கள். இனிமேல் நாம் இருவரும் உயிரோடு இருக்க வேண்டாம் என முடிவு செய்து, நேற்று முன்தினம் இரவில் குரும்பூர் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள இடத்தில் வைத்து, இருவரும் மதுவில் குருணை மருந்தை(விஷம்) கலந்து குடித்துள்ளார்கள். இதில் பூச்சிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அஜித்குமார் அங்கிருந்து நடந்து தனது வீட்டிற்குச் செல்ல முயற்சி செய்தார்.

அப்போது தனது வீட்டிற்கு அருகே சென்றபோது மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். நள்ளிரவு ஆன பிறகும் இருவரும் வீட்டிற்கு வரவில்லையே என, பூச்சிமுத்து, அஜித்குமார் ஆகிய 2 பேரையும் அவர்களது குடும்பத்தினர் தேடினர். அப்போது அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை அறிந்த இருவரின் பெற்றோரும் கதறி அழுதார்கள். வேலைக்கு போ என்று கூடச் சொல்லக் கூடாதா, அதற்காக இப்படி ஒரு கோர முடிவையா எடுப்பார்கள் எனப் பெற்றோர் கதறித் துடித்தார்கள்.

இதற்கிடையே வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வேலைக்குச் செல்லாததைப் பெற்றோர்கள் கண்டித்ததால், 2 நண்பர்கள் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share via
Copy link
Powered by Social Snap