
கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் பட்டாசுகள் மறைத்து வைத்து யானைக்கு கொடுத்ததால், அன்னாச்சி பழத்தை உண்ட யானையின் வாயில் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில், உயிரிழந்த யானைக்கு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை சேர்ந்த 15 உடைய யானை கர்ப்பிணியாக இருந்துள்ளது. இந்த நிலையில் உணவுக்காக மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு சென்றது. அங்கு கிராம மக்கள் யானைக்கு பிடித்தமான உணவு வகைகளை வழங்கினர்.
ஆனால் சில விஷமிகள், சமூக விரோதிகள் அன்னாச்சி பழத்தில் பட்டாசை மறைத்து வைத்து யானைக்கு கொடுத்துள்ளனர். அதை யானை சாப்பிட்டபோது பட்டாசு வெடித்து சிதறியது.
இதில் யானையின் நாக்கு மற்றும் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியில் அலறி துடித்த கருவுற்ற யானை அங்கும் இங்கும் ஓடி, அங்குள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது. இதுதொடர்பான படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களை உலுக்கின.
யானை காயம் அடைந்த தகவல் அறிந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 2 கும்கி யானைகளின் உதவியுடன் கருவுற்ற யானையை மீட்கப்பட்ட பின்னர் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி கடந்த 27-ம் தேதி மாலை 4 மணிக்கு யானை உயிரிழந்தது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாச்சி பழத்திற்குள் பட்டாசு வைத்தவர்கள்தான் யானை உயிரிழப்புக்கு முக்கிய காரணம் ஆவார்கள். அவர்கள் மனிதர்கள் தானா என்று கேள்வி கேட்டு சமூக வலைதளங்களில் பல பிரபலங்களும், இணையவாசிகளும், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்திலும் கோபத்தையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், விலங்கினத்துக்கும் இருக்கும் அன்பு கூட மனித இனத்துக்கு இல்லையா? பல காணொளிகளையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.