
தமிழகத்தில் 8 வயது சிறுவன் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரின் சொட்டகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி தங்கராஜ்- சுமதி, இவர்களுக்கு இரு மகன்கள். பனியன் நிறுவனத்தில் இருவரும் வேலை செய்வதால் காலையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவார்கள்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் மகன்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். மதியம் வரை விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் அவரவர் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் தங்கராஜின் இளைய மகன் பவனேஷ் மட்டும் மாயமானதாக கூறப்படுகிறது.
வேலை முடித்து வந்த தங்கராஜ் சுற்றுப்பகுதிகளில் சிறுவனை தேடிய பிறகு, இரவு ஊத்துக்குளி காவல் நிலையம் சென்று மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து பொலிசாரும் தேடிய நிலையில், கழுத்து அறுபட்ட நிலையில் முட்புதருக்குள் சிறுவனின் சடலம் கிடைப்பதாக தகவல் வந்துள்ளது. பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றியதுடன் விசாரணையை தொடங்கினர்.
மர்மமான முறையில் நடந்த இக்கொலை சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து கொலைக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். மாயமான சிறுவனை, பதின் பருவ சிறுமி ஒருவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் காதல் வளர்த்து வந்த ஒரு காதல் ஜோடியை பிடித்து விசாரித்ததாக கூறப்படுகின்றது.
சம்பவத்தன்று அந்த பகுதிக்கு கல்லூரி மாணவன் ஒருவன், பள்ளி மாணவியை அந்த பகுதிக்கு அழைத்து சென்று காதல் வளர்த்து வந்துள்ளான். இதனை அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பவனேஷ் பார்த்து விட்டதாகவும், இதில் மாணவி சிறுவனின் பக்கத்து வீட்டு சிறுமி என்றும் கூறப்படுகின்றது. இதனால் தன்னை பற்றி வீட்டில் கூறிவிடுவான் என்ற பயத்தில் காதலர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.