
இந்தியாவில் குக்கரில் குழந்தையின் தலை மாட்டிக் கொள்ள பத்திரமாக அதை வெட்டி எடுத்து குழந்தையை மீட்ட சம்பவம் நடந்துள்ளது. குஜராத்தின் பவா நகரை சேர்ந்த குழந்தை பிரியன்ஷி வாலா, நேற்று காலை குக்கரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குக்கரில் தலை மாட்டிக் கொண்டது.
இதை பார்த்த பெற்றோர் உடனடியாக குக்கரை எடுக்க முயற்சி செய்தனர், முடியாமல் போனது. அக்கம்பக்கத்தினர் முயற்சி செய்து பலனில்லாமல் போனதுடன் குழந்தையின் தலையில் காயங்கள் ஏற்பட்டது. ஆபத்தை உணர்ந்த பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர்.
அங்கு குழந்தைகள் நிபுணர் முதல் எலும்பு சிகிச்சை நிபுணர் வரை பல்வேறு துறை மருத்துவர்கள் குக்கரை எடுக்க முயற்சித்தனர். ஆனால் அனைவரது முயற்சியும் வீணானது. இதையடுத்து பாத்திரங்கள் பழுது பார்ப்பவரை அழைத்து வந்து, குக்கரை வெட்டி எடுத்தனர் குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதும், காயங்கள் இருப்பதால் மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.