மாமியாரைப் பழிவாங்க மருமகள் போட்ட சீரியல் ப்ளான்… இறுதியில் அரங்கேறிய பாரிய ட்விஸ்ட்!

திண்டுக்கல் மாவட்டத்தில் மாமியாரைப் பழிவாங்க மருமகள் செய்த காரியம் அவருக்கே இறுதியில் சோதனையில் முடிந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோவிலூர் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் நதிவதானா. இவருக்கும், செல்வம் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில் நதிவதனாவுக்கும், அவரது மாமியார் காளீஸ்வரிக்கும் ஏற்பட்ட தகராறில் நதிவதானாவை தாய்வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் நதிவதனா ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 10ம் வகுப்பு படிக்கும் தனது தங்கையை விருந்துக்கு அழைத்துச் சென்ற மாமியார் காளீஸ்வரி, தனது கணவரின் சகோதரர் தமிழரசனுக்கு கட்டாய திருமணம் செய்து வீட்டில் அடைத்து வைத்துள்ளதாகவும், ஊரடங்கு காரணமாக புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு ஆதாரமாக சிறுமிக்கு தமிழரசன் தாலி கட்டும் வீடியோவையும் கொடுத்துள்ளார். இதனை அடுத்து மாமியார் காளீஸ்வரி, நதிவதனாவின் கணவர் செல்வம் உள்ளிட்டோரை பொலிசார் பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டாய திருமணம் நதிவதனாவின் உதவியுடனே நடந்தது தெரியவந்துள்ளது.

தனது கணவரின் சகோதரர் தமிழரசன், 10ம் வகுப்பு படிக்கும் நதிவதனாவின் தங்கையை விரும்பியுள்ளார். மேலும் வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்துகொள்வதாக கூறியதால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டாரின் ஏற்பாட்டின் பேரில் கோயிலில் வைத்து சிறுமிக்கு திருமணம் நடந்ததுள்ளது. தற்போது கணவருடன் சண்டையிட்டு நதிவதனா பிரிந்து வந்துவிட்டதால், மாமியார் மற்றும் கணவரை பழிவாங்குவதற்காக, தங்கைக்கு மாமியார் வீட்டில் கட்டாய திருமணம் செய்ததாக நதிவதனா நாடகமாடியுள்ளார்.

இந்த நிலையில் திருமணம் செய்து வைத்த இருவரது பெற்றோர், அதற்கு உடந்தையாக இருந்த நதிவதனா, அவரது கணவர் செல்வம் மற்றும் சிறுமியை திருமணம் செய்த தமிழரசன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் அனைவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். மாமியார் குடும்பத்தை பழிவாங்க எண்ணி கடைசியில் குடும்பத்துடன் தானும் சிக்கிக் கொண்ட மருமகளின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap