அடுத்த வருடத்தில் இருந்து தாமரைக் கோபுரம் மக்கள் பாவனைக்கு!!

தாமரைக் கோபுரத்தின் சகல பணிகளையும் பூர்த்தி செய்து அடுத்த வருடம் மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தாமரைக் கோபுரத்தின் வேலைத்திட்டங்களை மிகவும் பயனுள்ள முதலீடாக உயர்தரத்துடன் நவீன மயப்படுத்தி நாட்டுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் தொடர்புடைய, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகர்களை, வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு, தாமரைக் கோபுரத்திட்ட அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்கு அமைவாக தாமரைக் கோபுர வளாகத்தில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள வர்ததக நிலையங்கள், சிற்றுண்டிச்சாலைகள், பொழுதுபோக்கு விளையாட்டு வசதிகள் என்பவற்றில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதுடன் சம்பிரதாயபூர்வமான நிர்மாணங்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வளாகத்தின் உள்ளக திட்டமிடலானது அந்தந்த முதலீட்டாளர்களால் ஆக்கப்பூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் செயற்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் போல இலங்கை மக்களும் தாமரைக் கோபுரத்தை கண்டுகளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap