காணாமல் போன சிறுமி : தனி ஒருவன் படத்தை போல வேகமாக செயல்பட்ட இளைஞர்கள்!!

8 வயது சிறுமி பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் காணாமல் போனதை தொடர்ந்து 24 மணி நேரத்தில் இளைஞர்கள் சிலர் பத்திரமாக மீட்டு கொடுத்தது பாராட்டுகளை பெற்று வருகிறது.

ராமநாதபுரம், சத்திரக்குடி பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் தன்னுடைய எட்டு வயது மகளுடன் பட்டுக்கோட்டைக்கு வந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கழிவறை வாசலில் சிறுமியை நிற்க வைத்துவிட்டு அவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.

திரும்பி வந்த பாபு மகளை தேடிய பொழுது அவர் காணவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த பாபு அக்கம்பக்கத்தில் விசாரித்து பல இடங்களில் தேடி அடைந்துள்ளார்.

இருப்பினும் அவருடைய மகள் கிடைக்கவில்லை. இதனால், பாபு அழுதுகொண்டே மிகவும் சோகமாக அமர்ந்து இருந்தார். இதனை சில இளைஞர்கள் கவனித்து பாபுவிடம் வந்து விசாரித்துள்ளனர். அப்போது தன்னுடைய மகள் காணாமல் போய் விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற இளைஞர்கள் புகார் அளித்தனர். பின்னர் பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த அந்த இளைஞர்கள் மர்ம நபர் ஒருவர் சிறுமியை அழைத்துச் செல்வதைக் கண்டனர்.

இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களின் உதவியுடன் அந்த மர்ம நபரை கண்டுபிடித்து சிறுமியை மீட்டு எடுத்து தந்தையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவமானது பட்டுக்கோட்டை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன சிறுமியை 24 மணிநேரத்திற்குள் மீட்டு கொடுத்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Share via
Copy link
Powered by Social Snap