தொடுகை இல்லாமல் கையடக்க தொலைபேசி ஊடாக மின் உபகரணங்களை கட்டுப்படுத்தும் இளைஞன்!!

எந்தவிதமான தொடுகையும் இல்லாமல் ஸ்மாட் கையடக்க தொலைபேசி ஊடாக ஒலிச்சைகை வாயிலாக மின் உபகரணங்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப முறைமையை இளைஞரொருவர் கண்டுபிடித்துள்ளார்.

அம்பாறை – கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனையை சேர்ந்த 23 வயதுடைய சௌதுன் நஜ்ஜாஸ் நஜிமுல்ஹக் எனும் இளைஞரே இவ்வாறு எந்தவிதமான தொடுகையும் இல்லாமல் ஸ்மாட் கையடக்க தொலைபேசி ஊடாக ஒலிச்சைகை வாயிலாக மின் உபகரணங்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப முறையைக் கண்டுபிடித்துள்ளார்.

இதன் மூலம் கொரோனா வைரஸ் போன்ற தொடுகையினால் பரவக்கூடிய தொற்று நோய்களிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் தற்கால சூழலில் அலுவலகங்கள் பாடசாலைகள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் மின்சார உபகரணங்களை,

தொடுகை முறையில் செயலிழக்கச் செய்வதை தவிர்த்து ஒலியினூடாக கட்டுப்படுத்தி தொடுகை மூலம் பரவும் நோய்களிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளும் நோக்குடனேயே இதனை வடிவமைத்துள்ளார்.

இதன் மூலம் மின் உபகரணங்களை அருகில் இருந்து மட்டுமல்லாது தொலைவிலுள்ள எப்பாகத்திலிருந்தும் குறிப்பாக இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் இணைய வழியாக ஒலிச்சைகை மூலம் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.

இதனை மிகக் குறைந்த செலவில் செயற்படுத்த முடியும் எனவும், தனவந்தர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வரும் பட்சத்தில் மேலும் அபிவிருத்தி செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap