நண்பன் என்றால் இப்படித்தான் இருக்கணும்: சிவகார்த்திகேயனை புகழ்ந்த நெல்லை துணை கமிஷனர்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரை உலகில் மிக குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்து உள்ளார் என்பதும் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு நடிகராக மாறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் அனைத்து தரப்பினர்களுக்கும் பிடிக்கும் ஒரு நடிகரானதற்கு திரைப்படங்களில் புகைக்கும் மற்றும் குடிக்கும் காட்சிகளில் பெரும்பாலும் நடித்ததில்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.

இந்த நிலையில் திரைப்படங்களில் மட்டுமின்றி அவர் நிஜ வாழ்விலும் தான் குடிக்கவில்லை, சிகரெட் புகைக்கும் பழக்கம் இல்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பேசியுள்ளார். அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியபோது ’நான் இதுவரை சிகரெட் புகைத்தது இல்லை, லிக்கர் சாப்பிட்டதும் இல்லை. அதற்கு காரணம் என்னுடைய நண்பர்கள் தான்.

என்னுடைய நண்பர்கள் யாரும் என்னை சிகரெட் பிடிக்கவும் லிக்கர் சாப்பிடவும் கட்டாயப்படுத்தியதில்லை என்று கூறினார். மேலும் உங்கள் அப்பா அம்மா சம்பாதித்த காசை சிகரெட்டுக்கும் லிக்கருக்கும் செலவு செய்து உங்கள் உடம்பை நீங்களே கெடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்

இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நெல்லை துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன் அவர்கள் கூறியதாவது: நட்சத்திரங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்கள் என்றால் இதனையும் கொஞ்சம் கேளுங்க. குடிக்க, புகைக்க எந்த நண்பனும் அழைக்க மாட்டான், அப்படி அழைப்பவர் நட்பிலிருந்து வெளியேறுங்கள். அவன் உங்களை உலகிலிருந்து வெளியேற அழைக்கிறான் என்று பதிவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அயலான்’ மற்றும் நெல்சன் இயக்கி வரும் ‘டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Share via
Copy link
Powered by Social Snap