கல்விக்காக துவிச்சக்கர வண்டி வழங்கல்

எமது உயிரிழை அமைப்பானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த போர் மற்றும் ஏனைய காரணங்களால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட 210 க்கும் மேற்பட்ட நபர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு, ஆதார உபகரணங்கள் வழங்குதல் ,மருத்துவ உதவி, மற்றும் பிள்ளைகளுக்கான கல்வி ஆகிய அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றது. இச்சேவையினை நாம் புலம்பெயர் உறவுகளின் நிதி அனுசரணையின் மூலமாகவே செயற்படுத்தி வருகின்றோம் . எமது இச்சேவையானது எமது பயணிகளோடு மட்டும் நின்றுவிடாது வடக்கு-கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களையும் இனங்கண்டு அவர்களுக்கான தேவைகளை கேட்டறிந்து வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் நாம் 2021.03.03 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலப்பெருமாள் குளம் என்னும் இடத்தில் வசிக்கும் ஒரு மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்குவதற்கு அவர் கல்விகற்கும் பாடசாலைக்குச் சென்றிருந்தோம். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பலப்பெருமாள் குளம் என்னும் அக்கிராமம் போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் மிகவும் பின்தங்கிய கிராமமாக காணப்படுகின்றது.
இங்கு செல்வன் ஞானரூபன் டர்சிகன் முல்லைத்தீவு, அம்பலப்பெருமாள்குளம் அ.த.க பாடசாலையில் தரம் 04 ல் கல்வி கற்று வருகின்றார். இவரது தந்தையார் பெனாண்டோ பெற்றிக் ஞானரூபன் அவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு நுரையீரல் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார்.
தாயார் ஞானரூபன் இந்துமதி குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் சென்று வரும் நிலையில் டர்சிகன் தற்போது சிறிய தாயார் மற்றும் அம்மம்மா ஆகியோரின் அரவணைப்பில் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

பாடசாலைக்கும் டர்சிகனது வீட்டுக்கும் இடைப்பட்ட சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தினை இதுவரை காலமாக நடந்து சென்றே தனது பாடசாலைக் கல்வியினைக் கற்று வந்துள்ளார். டர்சிகன் கற்றலில் மிகுந்த ஆர்வமுடையவர் எனவும் அனைவருக்கும் தாமாக முன்வந்து உதவி செய்யும் நற்குணங்களுமுடையவர் எனவும் அவருக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் பெருமையுடன் எம்மிடம் தெரிவித்திருந்தார்.
இக் கிராமம் பின்தங்கிய நிலையில் காணப்பட்டாலும் இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருகின்றனர் என பாடசாலை ஆசிரியர் கூறியிருந்தார் . அம்மாணவனுக்கான துவிச்சக்கரவண்டிக்கான நிதியினை கனடாவைச் சேர்ந்த ஷாமினி யோகன் அவர்கள் வழங்கியிருந்தார். அவர் இதற்காக 24, 500.00 ரூபா நிதியினை வழங்கியிருந்தார். செல்வன் டர்சிகன் அவர்களுக்கு கற்றலுக்காக இவ்வுதவியினை வழங்கிய ஷாமினி யோகன் அவர்களுக்கும், கனடாவில் எமது உயிரிழை அமைப்பின் செயற்பாட்டாளராக பணியாற்றி வரும் அமலன் அண்ணா அவர்களுக்கும் எமது உயிரிழை அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap